அன்னை புஷ்பாம்பிகை சமேத அருள்மிகு பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம் கீழக்கொற்கை
இறைவன்- பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை தீர்த்தம் சந்திரபுஷ்கரனி
தல மரம் வன்னி
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய தலம்.
சனி பிரதோஷ நாளில் சூக்கும நிலையில் பிரம்மா-சரஸ்வதி வழிபாடு செய்யும் தலம்.
சித்தர் கோரக்கர் சிவபெருமானைகண்ட தலங்களுள் ஒன்று. மிக பழமையான சோழர் கால கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில் இது.
ஐந்து கல்வெட்டுகள் உள்ளன.
இவ்வூர் கீழக்கொற்கை முன்பு குலோத்துங்க சோழீச்சரம்
என அழைக்கப்பட்டது.பிரம்மாவுக்கு அருளியதால் சிவனார் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். பூக்களை பூமியில் சிருஷ்டித்ததால், உமையவள் புஷ்பவல்லி எனும் திருநாமம் கொண்டாள்.இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களுக்கு ஞானம் கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் வாழ்வில் சுகந்தம் வீசும்; சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்!
மிக அமைதியான கிராமம்மிக அமைதியான கோவில் இறைவனை கண்டவுடன் மிக்க மன நிம்மதி வருவது உண்மை.
அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு, பலன் பெற்றுச் செல்கின்றனர். மற்ற நட்சத்திரகாரர்கள், அவிட்ட நட்சத்திர நன்னாளில் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.இத் தலத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ,தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இப்பகுதியில் உள்ள அட்டவீரட்டத் தலங்களை தரிசித்து வந்தார்.
அவர் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, இங்கிருந்த பொது மடத்தில் தங்கினார்.
இந்த மடத்தில் ஏற்கெனவே நிறைய பக்தர்கள் தங்கியிருந்தனர்.
பல சிவத்தலங்களுக்கு சென்று வந்த அசதியில் நன்றாக உறங்கிவிட்டார்.
நள்ளிரவு வேளையில் திடீரென கண்விழித்த கோரக்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் இவரைப்போலவே இந்த மடத்தில் தங்கியிருந்த சிவபக்தை ஒருவரின் சேலைத்தலைப்பு இவரது கை மேல் கிடந்தது.
சித்த புருஷரான இவர் மிகவும் வருந்தினார்.
உடனே இதற்கு பிராயச்சித்தம் தேடி, அரிவாளால் தன் இரு கைகளையும் வெட்டிக்கொண்டார்.
பின் இந்த மடத்திலேயே சில காலம் தங்கி, தனது இந்த தோஷம் நீங்க இங்கிருந்த சந்திர புஷ்கரணியில் நீராடி, தனது குறுகிய கையால் தாளம் போட்டு, இத்தல ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் தினமும் வணங்கி வந்தார்.
கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவன்.
சிவனின் அருளால் சித்தரின் கை கொஞ்ம், கொஞ்சமாக வளர்ந்தது. கோரக்கர் கை வெட்டுப்பட்டதால் இத்தலம் கோரக்கை எனவும், சிறிது காலம் குறுகிய கைகளில் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொற்கை ஆனது.
பிரம்ம ஞானபுரீஸ்வரர் பெயர்க்காரணம்:
பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் எடுத்துக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒளித்து வைத்துக்கொண்டனர்.
இதை மகாவிஷ்ணு காப்பாற்றி கொடுத்தார்.
இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை.
எனவே அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார்.
ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார்.
இதனால் பிரம்மா மீண்டும். சிறப்பாக படைப்புத்தொழில் புரிந்தார்.
இதனால் இத்தல இறைவன் பிரம்ம ஞான புரீஸ்வரர் ஆனார்.
கோவில் அமைப்பு கிழக்கு பார்த்த கோவில்அம்மன் தெற்கு நோக்கி நின்றவண்ணம்
அருள்பாலிக்கிறார். அர்த்தமண்டபம் , மக மண்டபம்,முக மண்டபம் என நீண்ட மண்டபங்களுடன் உள்ளது.
முகமண்டபத்தில் சோழமன்னர் ஒருவர் கூப்பிய கரங்களுடன் உள்ளதை காணலாம், அருகில் விநாயகர். அருகில் மாடத்தில் அதிகார நந்திகேஸ்வரர் சிலை உள்ளது. வால் புறம் முருகன் வள்ளி தெய்வானையுடன், பின் மாடத்தில் கிராத மூர்த்தி வில்லுடன் உள்ளார் வெளியில் நந்தி மண்டபம் உள்ளது. அம்பிகை சன்னதி தனியாக தெற்கு நோக்கி உள்ளது. குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
பிரார்த்தனை : கல்வியில் சிறக்க, திருமண தடை நீங்க, மூளை வளர்ச்சி, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.நேர்த்திக்கடன் :
முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
கும்பகோணம் மகாமகம் மேல் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் வழியிலும் கொருக்கை சென்றடையலாம்.
தொடர்புக்கு
ஸ்ரீ. M.செந்தில் குருக்கள்
9789610836
Om namashivaya om namashivaya om namashivaya shivaya namaom
பதிலளிநீக்கு